காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை ஒரு வரைமுறைக்குள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இயந்திரமாக இயங்கும் காலத்தில் தான் நாம் வாழ்கிறோம்.
கார், அடுக்குமாடி குடியிருப்பு, வீட்டைக் காக்க வெளிநாட்டு நாய், ஃப்ளாட்டைக் காக்க வாட்ச் மேன், சமைக்க ஒரு குக், வீட்டை அலங்கரிக்க பல லட்சம் மதிப்புள்ள அலங்காரப் பொருட்கள் என மற்றவர் முன்னிலையில் தனது ஸ்டேட்டஸை காட்டிக் கொள்வதற்காக பணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு குழந்தைகளை பராமரிக்க நேரமா இருக்கப்போகிறது.
இன்று பலரும் குழந்தையை ஏன் பெற்றுக் கொள்கிறோம் என்றே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பல பெண்கள் கல்யாணம் முடிந்தபிறகு குழந்தைப் பெற்றுக் கொள்ள ஒப்புக் கொள்வதில்லை. அதற்கு காரணமாக தங்களது அழகை அது கெடுத்துவிடுவதாக கூறுகிறார்கள்.
அப்படியே குழந்தை பெற்றுக்கொள்ள ஒப்புக் கொண்டாலும் அதை வளர்ப்பதை வீட்டு வேலைக்காரியிடமோ அல்லது வீட்டில் உள்ள மூத்தோரிடமோ கொடுத்துவிட்டு விலகி விடுகிறார்கள்.
இந்த தொழில்நுட்பயுகத்தில் கூட தாய்ப்பாலின் அருமையை வளர்ந்த நாடுகளிலும் பின்பற்றி வருகின்றனர். குட்டி போடும் விலங்கினங்களுக்கு இயற்கை அளித்த மிகப்பெரிய அமிர்தம் தாய்ப்பால். ஆனால் அதன் அருமை நம் தாய்மார்கள் பலரும் உணர்வதில்லை. பிறந்த குழந்தைக்கு ஆறு மாதத்துக்கு குறையாமல் தாய்ப்பால் வழங்க வேண்டுமென நமது முன்னோர்கள் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தற்போதைய சூழலில் இரண்டு மாதங்கள் தாய்ப்பால் கொடுப்பதே கேள்விக்குறியாகி விட்டது.
வேலைக்குச் செல்லும் பெண்கள் தான் பெரும்பாலும் தாய்ப்பால் கொடுக்க முடியாமல் அவதியுறுகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு தான் வளர்ந்த நாடுகளில் மகப்பேறுக்கும் முன்னும் பின்னும் நீண்ட விடுப்பு அளிக்கப்படுகிறது.
இதுபோன்று வேலைக்குச் செல்லும் எல்லாப் பெண்களுக்கு விடுமுறை கிடைத்துவிட்டதா என்றால் கட்டாயம் இல்லை என்ற பதில் தான் கிடைக்கும். அதற்காக தாய்ப்பால் கொடுக்காமல் இருக்க முடியுமா? பெண்கள் தாய்ப்பால் ஊட்டுவதையே பெரும் பணியாக கருத வேண்டும். குழந்தை பசியால் அழும்போதெல்லாம் தாய்ப்பால் ஊட்ட வேண்டும். அடிக்கடி பால் ஊட்டும் போது தான் பால் சுரப்பது அதிகரிக்கிறது என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
இது இப்படி இருக்கையில் வேலைக்குச் செல்லும் பெண்களாலும் தாய்ப்பால் ஊட்ட முடியும். காலையில் எழுந்து வேலைக்கு கிளம்பும் முன் எத்தனைக் முறை பால் குடுக்க முடியுமோ அத்தனை முறை குடுத்துவிட வேண்டும். அதன் பின் ஒரு சுத்தமான பாத்திரத்தில் தாய்ப்பாலை எடுத்து வீட்டில் உள்ளவரிடம் குடுத்து முறையாக குடுக்க வைக்க வேண்டும்.
சாதரண வெப்பநிலையில் 12 மணிநேரமும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் 24 மணிநேரமும் தாய்ப்பால் கெடாமல் இருக்க முடியும். என இடைப்பட்ட நேரத்தில் குழந்தைக்கு பால் கொடுத்துவிடலாம். வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபின் தாய்ப்பாலை தாயே வழங்கலாம்.
தாயின் காம்பு பெரியதாக இருந்தால் குழந்தைக்கு நேரிடையாக தாய்ப்பால் வழங்குவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் காம்பு பெரியதாக இருந்தால் குழந்தையின் தொண்டையில் சிக்கி மூச்சுத்திணற வாய்ப்பிருக்கிறது. மேலும் காம்பில் விரிசல் ஏற்பட்டிருந்தால் தாயிற்கு வலி ஏற்படும் அப்படிப்பட்ட சூழ்நிலையில் சுத்தமான பாத்திரத்தில் தாய்ப்பாலை எடுத்து முறையாக கொடுக்க வேண்டும்.
மிகவும் பாதுகாப்பான இடம் கருவறை என்பது எவ்வளவு அளவிற்கு உண்மையோ அந்த அளவிற்கு தாய்ப்பால் தான் குழந்தைக்கு மிகப் பாதுகாப்பான உணவு என்பதும் உண்மை.