Mnadu News

திருக்கோவில்களுக்கு அருகில் அமைக்கப்படும் மின்மயானம்..!

*பழங்கால கோவில்கள் மற்றும் பள்ளிக்கூடத்தின் அருகே மின்மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் ; கோவை- பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் சுமார் 1600 ஆண்டு கால பழமைவாய்ந்த அருள்மிகு ஈஸ்வரன் திருக்கோவில், 1350 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோவில் மற்றும் 500 ஆண்டுகள் பழமையான அங்காளம்மன் திருக்கோவில் உள்ளிட்டவை அடுத்தடுத்து அமைந்துள்ளன. இவற்றிற்கு அருகில் தனியார் மேல்நிலை பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகின்றது. இந்த சூழலில் ஈஸ்வரன் திருக்கோவில் மற்றும் தனியார் பள்ளி இடையே புதிதாக சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின் மயானம் அமைக்க ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் 500 க்கும் மேற்பட்டோர் திரண்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திடீர் முற்றுகையில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கிருந்த காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஐந்து பேரை மட்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் மனு அளிக்க அனுமதித்தனர்.

அம்மனுவில் பொதுமக்கள் சார்பில் மின் மயானம் அமைக்க வேண்டாம் என்றும் வேறு பகுதிக்கு அந்த மயானத்தை இடமாற்றம் செய்ய உத்தரவிடுமாறும் வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்திலேயே மின் மயானம் அமைக்கும் பட்சத்தில் மிகப்பெரும் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Share this post with your friends