கிருஷ்ணகிரி அருகே நிப்பட் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள நிப்பட் மற்றும் மூலப் பொருட்கள் எரிந்து நாசமாகியது.
கிருஷ்ணகிரியை அடுத்த காவேரிப்பட்டிணத்தில் நிப்பட் கம்பெனி மிகவும் பிரபலமாக நடைபெற்று வரும் குடிசை தொழிலாகும். இங்கு தயாரிக்கப்படும் நிப்பட்டுகள் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் காவேரிப்பட்டிணத்தை சேர்ந்த ஆனந்தி என்பவர் கடந்த 20 வருடங்களாக குடிசை தொழிலாக நிப்பட் கம்பெனி நடத்தி வருகிறார். இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை வருவதால் கடந்த மூன்று தினங்களாக நிப்பட் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்த நிப்பட்டுகள் அனைத்தும் பாக்கெட்டுகளில் அடைத்து, பாக்ஸ்களில் அடுக்கி இன்று வெளியூருக்கு அனுப்ப தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில் விடியற்காலையில் பணியாளர்கள் வேலையை முடித்துவிட்டு நிப்பட் கம்பெனியை மூடிவிட்டு சென்றனர்.
பிறகு கம்பெனியிலிருந்து திடீரென அதிகமான புகை வந்தது . இதை பார்த்த அக்கம் பக்கம் வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் வருவதற்குள் தீ மல மலவென பற்றி கம்பெனி முழுவதும் பரவியது. இந்த தீ விபத்தில் கம்பெனியில் இருந்த எண்ணெய், தேங்காய் மட்டைகள், தயார் செய்து வைத்திருந்த நிப்பட் பாக்ஸ்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. கிருஷ்ணகிரியில் இருந்து தீயணைப்புத் துறையினர் சென்று தீயை அணைத்தனர். இது குறித்து காவேரிப்பட்டிணம் போலீசார் தீ எப்படி பரவியது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த தீ விபத்தில் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான நிப்பட் மற்றும் மூலப்பொருட்கள் எரிந்து நாசமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.