Mnadu News

தீக்குளித்து இறந்தவர் பழங்குடியினத்தவர் அல்ல – உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்.

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை பகுதியைச் சேர்ந்த 45 வயதான வேல்முருகன் மலைக்குறவர் சமூகத்தைச் சோந்தவராவார். இவர், தனது மகனுக்கு ஜாதி சான்றிதழ் பெறுவதற்கு வருவாய்த் துறை அலுவலகத்தில் விண்ணப்பித்தார். ஆனால் வருவாய்த் துறை அலுவலர்கள், வேல்முருகன் மகனுக்கு ஜாதி சான்றிதழ் வழங்காமல் இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வேதனை, மன அழுத்ததுடன் காணப்பட்ட வேல்முருகன், கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை உயர்நீதிமன்றம் வளாகம் அருகே உள்ள தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு வளாகம் அருகே திடீரென பெட்ரோலை தனது உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த வேல்முருகனை போலீஸார் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த வேல்முருகன் கடந்த புதன்கிழமை உயிரிழந்தார். இதுதொடர்பாக எஸ்பிளனேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும்போது வேல்முருகன் பேசிய விடியோ, சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவர், தனது மகனுக்கு ஜாதி சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் தீக் குளித்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து இறந்த வேல்முருகன் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை. வேல்முருகன் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் பழங்குடியினர் சான்று கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று தமிழ்நாடு அரசு தரப்பில் இன்று விளக்கமளிக்கப்பட்டது. அதைத் தொடர்நது, இதுகுறித்து மாவட்ட வருவாய் அதிகாரியை நியமித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

.

Share this post with your friends