திருமணத்தை மீறிய உறவால் இங்கே பல குடும்பங்களின் நிலை கேள்விக்குறியாகி வரும் நிலையில், மீண்டும் அது போன்று ஒரு சம்பவம் அரங்கேறி ஒரு குடும்பத்தின் நிம்மதியை பறித்துள்ளது. தேனியில் நடந்தது என்ன?
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள டொம்புச்சேரி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் 33 வயதாகும் ராஜா. இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இவரது அண்ணன் 36 வயதான மருதமுத்து. இவருக்கு வீரலட்சுமி என்கிற மனைவி உள்ளார். இந்த நிலையில் வீரலட்சுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரவீன் என்கிற வாலிபரும் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளனர். கள்ள உறவு குறித்த செய்தி மருதமுத்து காதுக்கு வரவே, மனைவியை பல முறை கண்டித்துள்ளார். மேலும், இதனால் இரு குடும்பங்களுக்கும் இடையே கடும் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. பிரச்சனை ஒரு பக்கம் தொடர்ந்து வந்தாலும், பிரவீன், வீரலட்சுமி கள்ள உறவை எல்லை இல்லாமல் தொடர்ந்து வந்தனர்.
இதனால் கடுமையான கோபத்தில் இருந்து வந்த மருதமுத்து பிரவீனிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். மேலும், கள்ள உறவை நீ தொடர்ந்தால் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் டொம்புச்சேரி சமுதாய கூடம் அருகே இவர்களுக்குள் பிரச்சனை முற்றி மருதமுத்து கத்தியை எடுத்து பிரவீணை குத்த வந்துள்ளார். இவர்களின் சண்டையை மருதமுத்துவின் தம்பி ராஜா தடுக்க முயன்றுள்ளார். அப்போது நிதானத்தை இழந்த பிரவீன் தன் பங்குக்கு தன் வீட்டில் ஒரு கத்தியை எடுத்து வந்து மருதமுத்துவை குத்த முயன்றுள்ளார். அவரோடு அவரின் நண்பர் தினேஷ் குமாரும் இருந்துள்ளார்.
மருதமுத்துவை குத்த பாய்ந்த போது பிரவீணை, ராஜா தடுத்த போது அவரின் கழுத்து பகுதியில் பலமாக குத்தப்பட்டு நிலையில் ரத்தம் சொட்ட சொட்ட மண்ணில் சரிந்துள்ளார். இந்த நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பிரவீன், தினேஷ் இருவரும் தப்பித்து சென்று விட்டனர். இந்த நிலையில், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ராஜாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் இழந்து விட்டார் என கூறப்படுகிறது. மேலும், இறந்த ராஜாவுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது என்றும், அவரின் மனைவி கர்ப்பமாக உள்ளார் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கொலைச் சம்பவம் குறித்து மருதமுத்து பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்ற போலீசார் பிரவீணை கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய அவரின் நண்பர் தினேஷை தீவிரமாக தேடி வந்த நிலையில், தினேஷ் தாமாகவே பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் சரணடைந்து உள்ளார். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் சிறையில் அடைத்தனர்.
அண்ணன் மனைவியின் கள்ளக் காதல் உறவால் வந்த பிரச்சனையை சரி செய்ய வந்த தம்பி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தேனியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருமணமான தம்பதிகளே குற்றம் குறை இருப்பின் பேசி தீர்த்து கொள்வதே நல்லது. இதனால் வேறு ஒரு நபரை நாடி சென்றால் வாழக்கை இனிமை ஆகிவிடும் என எண்ணுவது முட்டாள்தனத்தின் உச்சம். கள்ளக் காதல் உறவு வைக்க நினைக்கும் நபர்களுக்கு இந்த கொலைச் சம்பவமே ஒரு சான்றாக இருக்கட்டும்.