கர்நாடகாவின் பண்ணார்கட்டா அருகேயுள்ள பேடராயனதொட்டியைச் சேர்ந்த 38 வயதான முனிரத்னம்மா. இவர் தனது தங்கை மகனுடன் நடைபயிற்சிக்கு போவதாக கூறிவிட்டு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அந்த பெண்ணின் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை, என்னசெய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருந்த அவர்களிடம், மூன்று வாலிபர்கள் வந்து ஒரு பெண் புதர் மண்டிய பகுதியில் நிர்வாணமாக கிடப்பதாகவும், அருகே ஒரு சிறுவன் அழுது கொண்டே இருப்பதாக கூறி அவனை அந்த குடும்பத்திடம் ஒப்படைத்த அவர்கள், ஒரு படி மேலே சென்று காவல்துறைக்கும், மீடியாவுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், புகாரை பெற்ற போலீசார் முதலில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, ஒரு மூன்று வாலிபர்கள் ஆள் அரவமே இல்லாத பகுதியில் (காட்டு பகுதியில்) நடமாடி வருவதை கவனித்தனர். மேலும், இந்த மூன்று நபர்கள் தான் கொலை குறித்து தகவல் தெரிவித்த அந்த மூன்று நபர்களோ என சந்தேகமடைந்த போலீசார் அவர்களை அழைத்து விசாரித்த போது தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கூறியதால் சந்தேகம் உறுதியானது . பின்னர் தங்கள் பாணியில் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர்கள் உண்மையை கூறி உள்ளனர்.

தொடர் விசாரணையில் அவர்கள் சோமசேகர், ஹரிஷ், ஜெயந்த் என்பதும் அவர்கள் தான் நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணை தூக்கி சென்று கொடூரமாக வனபுணர்வு செய்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

பின்னர் குற்றவாளிகள் மூவரையும் சம்பவ இடத்திற்கு போலீசார் அழைத்துச் சென்று சம்பவத்தை விவரிக்க கூறினர். அப்போது குற்றவாளிகளில் ஒருவரான சோமசேகர் என்பவர் போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயலவே, சோமசேகரை துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்தனர். இதில் காயமடைந்த சோமசேகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
