தீமைகளை அழித்து நன்மைகளை உண்டாக்கும் வகையில் 9 பெண் ரூபங்களில் தன்னை வெளிக் காட்டி அருள் புரிகிறாள் துர்கா தேவி. மஹேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி என பல வகை ரூபங்கள் உள்ளன. கடந்த ஐந்து நாட்களாக நவராத்திரி பூஜை சிறப்பாக நடைப்பெற்று வருவதை தொடர்ந்து அக்டோபர் 1ஆம் நாளான இன்று ஆறாவது நவராத்திரி தினம் கொண்டாடப்படுகிறது.
முருகனின் சக்தியைக் கொண்ட கவுமாரி தேவியே நவராத்திரின் ஆறாம் நாள் வணங்கும் தெய்வமாகும். முருகப் பெருமானைப் போல் மயில்வாகனமும் சேவல் கொடியும் கொண்டவள் கவுமாரி தேவி. இவளை வழிபடும் ஆறாவது நாளுக்கு உரிய குமாரி, காளிகா தேவி ஆவாள்.
நவராத்திரியின்ஆறாவது தினத்தன்று ஏழு வயதுள்ள பெண்குழந்தைகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் வீட்டுக்கு அழைத்து, அவர்களை ‘காளிகா’ தேவியாக வழிபடவேண்டும். அம்பிகைக்கு தேங்காய் சாதமும், ஏதேனும் ஒரு நவதானியம் கொண்டு சுண்டலும் செய்து அம்பிகைக்கு நைவேத்தியம் செய்யவேண்டும். இன்று நாம் அம்பிகையை வழிபடுவதால், எதிரிகளின் தொல்லையில் இருந்து முழுமையாக விலகும்.
அம்மாளை செம்பருத்தி பூ கொண்டு அலங்கரித்து நீலாம்பரி ராகத்தில் இசை அமைத்து பூஜை செய்தல் வேண்டும். இன்றைய தினம் பருப்பு அல்லது கடலை மாவு மூலம் தேவியின் நாமத்தை கோலம் போட வேண்டும்.