Mnadu News

நவராத்திரியில் நான்காம் தினம்: மகாலட்சுமி வணங்கும் முதல் நாள்

செப்டம்பர் 29, நவராத்திரியின் நான்காம் நாளான இன்று மகாலட்சுமியை வழிபட தொடங்குவதன் முதல் நாள் ஆகும். மகாலட்சுமி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது செல்வம். விரதமிருந்து அம்பாளை வழிபட்டால் கடன் தொல்லை தீரும்.

கடன் என்றால் பிறரிடம் நாம் வாங்கிய கடன் மட்டுமல்ல பிறவி கடனால் ஏற்படும் தொல்லைகள், இன்னல்கள் போன்றவைகளும் தீர்ந்து, மகிழ்ச்சியான வாழ்க்கையை பெற முடியும். பிறவி கடன், பிறரிடம் வாங்கிய கடன் என இரண்டையும் போக்குபவளாக மகாலட்சுமி இன்னாளில் அருள்புரிவாள். 

மகாலட்சுமி திருமகள், அலைமகள் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறாள். நவராத்திரியில் நாம் வழிபடக் கூடிய மகாலட்சுமி அலைமகள் என்று அழைக்கப்படுவாள். அமிர்தம் எடுக்க பாற்கடலை கடைந்த போது வந்ததால், அவருக்கு ‘அலை மகள்’ என்று பெயர் வந்தது.

பொதுவாக மனிதர்களுக்கு நரை, திரை, மூப்பு, பிணி போன்றவை இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தேவர்களுக்கு இதெல்லாம் கிடையாது என சொல்லப்படுகிறது. இருந்தாலும் முற்காலத்தில் அவர்களுக்கும் இதுபோன்றவை இருந்துள்ளது. இதனால் கடும் அவதி அடைந்த தேவர்கள், அதில் இருந்து விடுபட பிரம்ம தேவரிடம் வழி கேட்டுள்ளனர்.

நாராயணன் புகலிடமாக பாற்கடலில் அமிர்தம் உள்ளது. அதை உட்கொண்டால் நரை, திரை, மூப்பு, பிணி போன்றவைகள் நெருங்காது என்று, பாற்கடலை கடைய முடிவு செய்யப்பட்டது. பாற்கடலை கடந்த நிகழ்விற்கு பல கிளை கதைகள் உள்ளது. விஷ்ணு புராணம் உள்ளிட்ட பல புராணங்களில் பல கதைகளை சொல்லப்படுகின்றது.

நான்காம் நாளில் அம்பிகையை மகாலட்சுமி வடிவத்தில் வழிபட வேண்டும். நாம் இடக் கூடிய கோலம் படிக்கட்டு வகையிலான கோலமாக இருக்க வேண்டும். அதாவது மஞ்சள், அரிசி கலந்த அட்சதை அரிசியை கொண்டு, படிக்கட்டுகள் வடிவில் கோலம் இடம் வேண்டும்.

மகாலட்சுமிக்கு நெய்வேத்தியம் செய்வதற்கு, ஜாதி மல்லி மலர்களால் மகாலட்சுமியை அர்ச்சனை செய்ய வேண்டும். இலை வகையில் கதிர்பச்சை என்கிற செடியின் இதழால் அர்ச்சனை செய்ய வேண்டும். கொய்யா பழமும், கதம்ப சாதமும் வைத்து அம்பாளை வழிபடுவது சிறப்பாகும். தானிய வகைகளில் பட்டாணி சுண்டல் படைத்து வழிபட வேண்டும். அம்பாளுக்குரிய நிறம் கறுநீல நிறம்.

Share this post with your friends