நாகப்பட்டினம் வெளிப்பாளையம் பகுதியில் ஜெ.ஜெயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் கணினி பாடம் நடத்துவதற்காக யூடியூப் இணைப்பு மூலமாக புரொஜெக்டரில் வகுப்பு நடைப்பெற்றுள்ளது. அப்போது திடீரென ஆபாச காட்சிகள் கொண்ட வீடியோ ஓடியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மாணவ, மாணவிகள் செய்வதறியாது புத்தகத்தால் முகத்தை மூடியவாறு வகுப்பறை விட்டு வெளியேறி உள்ளனர்.
மேலும் இது குறித்து அறிந்த ஒரு மாணவரின் பெற்றோர் உடனடியாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாணவியோடு சென்று ஆட்சியரிடம் பள்ளியில் நடந்த சம்பவத்தை விவரித்து புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் பள்ளியில் உரிய விசாரணை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் குழந்தைகள் நல அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது ஆபாச வீடியோ ஓடியது உறுதி படுத்தப்பட்ட நிலையில் வகுப்பறையில் இருந்த மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.