திமுக எம்.பி. கனிமொழி உள்பட 15 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “திமுக எம்.பி. கனிமொழி உள்பட 15 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு விரோதமானது, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் உணர்வைக் குழிதோண்டிப் புதைக்கிறது.
எம்.பி.க்களின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவது என்பது நாடாளுமன்றத்தில் புதிய விதிமுறையா? ஜனநாயகக் கோயிலில் மிகப்பெரிய பாதுகாப்பு மீறலுக்கு பதில் தேடும் மக்கள் பிரதிநிதிகள் ஏன் தண்டிக்கப்படுகிறார்கள்?
15 எம்.பி.க்களின் இடைநீக்கத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். நாடாளுமன்றம் விவாத மேடையாக இருக்க வேண்டுமே தவிர எதிர்கட்சிகளை வாயடைக்க வைக்கக் கூடாது” என்று பதிவிட்டுள்ளார்.