Mnadu News

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ‘இந்தியா’ கூட்டணி நிலைக்காது – ராஜ்நாத் சிங்

இந்து கடவுள்களை அவமதிப்பதால் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ‘இந்தியா’ கூட்டணி நிலைக்காது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில் நேற்று பிற்பகல் நடந்தது. கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து பேசினார்.

அப்போது அவர், “பிரதமர் மோடி தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டின் வளர்ச்சி பாதை ஏற்றம் கண்டுள்ளது. பா.ஜனதா ஒரு போதும் வாக்குகளை பெற, ஆட்சி அமைக்க அரசியல் செய்ததில்லை. வளர்ந்த இந்தியாவிற்கு தமிழ்நாடு தலைமை தாங்க வேண்டிய தருணம் இன்று. ஆனால் தமிழகத்தை பழமையான சிந்தனையில் தி.மு.க. சிக்க வைக்க நினைக்கிறது. தி.மு.க.வின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேற வாய்ப்பு இல்லை.

ஆனாலும் எதிர்க்கட்சிகள் பிரதமர் மீது தனிப்பட்ட தாக்குதல்களை தொடர்ந்து வருகின்றன. அவர் மீது இவ்வளவு சேற்றை வீசுகிறீர்கள். நீங்கள் எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் தாமரைகள் இங்கே மலரும் என்பதை மறந்து விடுகிறீர்கள். இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்கள் பா.ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியை தாக்குகிறார்கள். அதே நேரத்தில் இந்து மதத்தையும் அவமதிக்க தொடங்கி உள்ளனர். இந்து மதம் எந்த சக்தியில் நம்பிக்கை கொண்டு உள்ளதோ, அந்த சக்தியை அழிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்து மதத்தில் சக்தி என்றால் என்ன என்று தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும்.

இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் தமிழகத்தில் ஊழல் குறைந்துள்ளதா? என்றால் பதில் இல்லை. காங்கிரஸ் -தி.மு.க. இந்தியா கூட்டணியால் இந்திய தேசிய பாதுகாப்பை பலப்படுத்துமா? என்றால் இல்லை. தேர்தலுக்கு பிறகு ‘இந்தியா’ கூட்டணி நீடிக்குமா? என்றால் இல்லை. அதிகாரமும் பதவியும் இன்றி இந்த கூட்டணி நிலைக்காது. உங்களின் விலை மதிப்பற்ற ஓட்டுக்களை நீங்கள் வீணடிக்க கூடாது” என்று அவர் கூறினார்.

Share this post with your friends