நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. இன்று தனது தேர்தல் அறிக்கையை டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் வெளியிட்டது. பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அமித்ஷா உள்ளிட்டோர் முன்னிலையில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. மோடி கேரண்டி என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த தேர்தல் அறிக்கையில், பிரதமர் மோடி பா.ஜ.க. கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் பயனடைந்தவர்களுக்கு முதல் தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது.
அதன் விவரம் வருமாறு: ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படும். நாடு முழுவதும் பொது வாக்காளர் பட்டியல் நடைமுறைப்படுத்தப்படும். பிரதமரின் மக்கள் மருந்தகங்களில் 80 சதவீத தள்ளுபடியுடன் மருந்துகள் வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும். பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். முத்ரா கடன் 10 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக அதிகரிக்கப்படும். இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் மேலும் 5 ஆண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது. திருநங்கைகளுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.