Mnadu News

நான்கு வருடங்களாக ஈக்களால் கிராமமக்கள் கடும் அவதி..!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த எரளிக்குப்பம் கிராமத்தில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த கிராம மக்களின் ஒட்டுமொத்த நிம்மதியையும், சுகாதாரத்தையும் கெடுத்துக்கொண்டுள்ளன “ஈ’க்கள். ஒரு விநாடி ஏமாந்தால் கூட காது, மூக்கு, வாய்க்குள் ஈக்கள் புகுந்து அட்டகாசம் செய்து விடுகின்றன. வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டி, சமையல் அறை, பெட்ரூம், பாத்ரூம் என்று ஒரு பகுதியையும் விட்டு வைக்காமல் ஆக்கிரமித்துள்ளன ஈக்கள். இதனால், தண்ணீர், டீ குடிக்க முடியாமலும், சாப்பாடு சாப்பிட முடியாமலும், நிம்மதியாக தூங்க முடியாமலும் அல்லாடுகின்றனர் எரளிக்குப்பம் கிராமம் மக்கள்.

பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கோழிப்பண்ணை அமைந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுக்கு முன்பு கோழிப்பண்ணை அமைக்கப்பட்ட போது, கிராமத்தில் உள்ளவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், சில மாதங்களாக அதிக அளவில் கோழிப்பண்ணை கழிவுகளின் துர்நாற்றத்திற்கு “ஈ’க்கள் வரத்துவங்கியது. கோழிப்பண்ணையில் உற்பத்தியாகும் “ஈ”க்கள் எரளிக்குப்பம் கிராமம் முழுவதும் ஆட்கொண்டு விட்டது.

“ஈ’’ க்களால் பொறுமையிழந்த மக்கள், ஆரம்ப கட்டத்திலேயே மாவட்ட ஆட்சியர், சுகாதார துறை, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் செய்துள்ளனர். ஆனால் தற்போது நான்கு ஆண்டுகள் வரை ஆகியும் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாமல் கடந்து விட்டனர். இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அரசு துறை அதிகாரிகள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். மேலும் இதற்கு தீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

Share this post with your friends