புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சேர்ந்த லக்ஷ்மணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில்,மதுரை சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மலங்குளம் என்ற பெரிய குளம் உள்ளது. இந்த குளத்தின் நீர்தான் இந்த பகுதியில் நிலத்தடி நீராகவும் விவசாயிகளுக்கும் விவசாயம் செய்ய பயன்படுகிறது.
இந்நிலையில்,விராலிமலையைச் சேர்ந்த மணிகண்டன், முருகன், கண்ணன் சுப்பிரமணியன் உட்பட பலர் சேர்ந்து இந்த குளத்தை ஆக்கிரமிப்பு செய்து சட்டவிரோதமாக வணிக நிறுவனங்கள் கட்டி ,வணிக பயன்பாட்டிற்கு விட்டு வாடகை வசூல் செய்து வருகின்றனர். இந்த கட்டிடத்தினால் கண்மாய் நீர் பிடிப்பு பகுதி குறைந்து உள்ளது. எனவே,உயர் நீதிமன்றம் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது நீதிபதிகள், மலங்குளம் ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நீர்நிலை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை 12 வாரத்திற்குள் அகற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.