நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள இளையநயினார்குளம் வடக்கூரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது அண்ணன் தானுசெல்வம். இவர்கள் இருவரும் கூலி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் அண்ணன் தாணு செல்வத்திற்கு திருமணம் நடக்கும் முன்பாகவே தம்பி அய்யப்பன் அனிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதனால் அண்ணன் தம்பி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு தனக்கு முன்பாக நீ எப்படி திருமணம் செய்யலாம் என அண்ணன் தாணு செல்வம் தம்பியிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றி கைகலப்பாகியுள்ளது . இதில் ஆத்திரம் அடைந்த அண்ணன் தாணு செல்வம், தம்பி அய்யப்பனை வெட்டி கொலை செய்தார்.
இது சம்மந்தமாக ராதாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தாணு செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கு நெல்லை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், தாணு செல்வத்திற்கு ஆயுள் தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.