வீரம், விவேகம் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் சிறுத்தை சிவா உடன் இணைந்து பணியாற்றிய படம் “வேதாளம்”. வீரம் படம் அஜித்தின் வெற்றிப் படங்களில் ஒன்றாக பார்க்கப்பட்டாலும், விவேகம் அதே போல படு தோல்வி படங்களில் முக்கிய இடத்தை பிடிக்கிறது. ஆனாலும், மீண்டும் ஒரு அழுத்தமான வெற்றியை பதிவு செய்ய அஜித் துணிந்து எடுத்த முடிவு தான் “வேதாளம்”. அனிருத் இசையில் வெளியான பாடல்கள் படத்துக்கு பெரும் பலமாக அமைந்தது. இதில் ஸ்ருதி ஹாசன், லக்ஷ்மி மேனன் என இருவருக்கும் சிறந்த ஸ்கோப் உள்ள படமாக வேதாளம் இருந்தது. இந்த நிலையில் தற்போது இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு உள்ளது.
“வால்டர் வீரய்யா” என்கிற படத்தைத் தொடர்ந்து சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகியுள்ள படம் “போலா சங்கர்”. இந்த படத்தை மெஹர் ரமேஷ் இயக்கியுள்ளார். மஹதி ஸ்வர சாகர் இசையமைப்பில் சிரஞ்சீவி தவிர்த்து தமன்னா, கீர்த்தி சுரேஷ், சுஷாந்த், ரகுபாபு, முரளி சர்மா, ரவிசங்கர், வெண்ணிலா கிஷோர், துளசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ஏகே என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், இந்த படத்தில் லட்சுமி மேனனின் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷும், ஸ்ருதி ஹாசன் கேரக்டரில் தமன்னாவும் நடித்துள்ளனர்.
ஆகஸ்ட் 11 அன்று வெளியான “போலா சங்கர்” படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அடுக்கடுக்காக வந்தாலும் அதை எல்லாம் கடந்து சுமார் 33 கோடிகளை இந்த இரண்டு நாட்களில் குவித்துள்ளது இப்படம். 101 கோடிகள் பட்ஜெட்டில் உருவாகி உள்ள “போலா சங்கர்” தொடர்ச்சியாக நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதால் 75 கோடிகளை வசூல் செய்தாலே பெரிய விஷயம் என திரை அரங்க உரிமையாளர்கள் கணித்த நிலையில், இப்படம் அதை கூட வசூல் செய்யாமல் மண்ணை கவ்வி உள்ளது.
கடந்த பொங்கல் பண்டிகையில் வெளியான “வால்டர் வீரய்யா” படத்தில் நடிக்க சிரஞ்சீவி 50 கோடி சம்பளம் வாங்கினார். அந்த படம் வெற்றி பெற்றதால் போலா ஷங்கர் படத்துக்கு 60 கோடி வாங்கி இருக்கிறார். படப்பிடிப்பு நடந்தபோதே 50 கோடியை சிரஞ்சீவிக்கு தயாரிப்பாளர் கொடுத்து விட்டார்.
இந்த நிலையில் மீதமுள்ள 10 கோடிக்கு காசோலை கொடுத்து இருந்தார். படம் தோல்வி காரணமாக 10 கோடி சம்பள காசோலையை தயாரிப்பாளர் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் அவரிடமே சிரஞ்சீவி திருப்பி கொடுத்து விட்டதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து சிரஞ்சீவியை வலைத்தளத்தில் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.