Mnadu News

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் அதிரடி கைது!

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிஎப்ஐ அமைப்பின் அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.


கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ) தலைவர் ஓஎம்ஏ சலாம் வீடு உட்பட பி.எப்.ஐ-இன் மாநில, மாவட்ட அளவிலான தலைவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை( என்ஐஏ ) மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், தமிழ்நாடில் கோயம்புத்தூர், கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட பல இடங்களில் பி.எப்.ஐ அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பி.எப்.ஐ மாநில தலைமை அலுவலகத்திலும் என்ஐஏ சோதனை நடத்தப்படுகிறது.

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்தல், பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளில் சேர மக்களை ஊக்குவித்தல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள நபர்களின் குடியிருப்பு மற்றும் அலுவலக வளாகங்களில் தேசிய புலனாய்வு முகமையின் இந்த சோதனை நடத்தப்படுகிறது. பி.எப்.ஐ அலுவலகங்களில் நள்ளிரவு முதல் விடிய விடிய சோதனை நடைபெறுகிறது. இந்நிலையில், இதனை கண்டித்து பி.எப்.ஐ கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருவதால் சோதனை நடைபெறும் இடங்களில் சிஆர்பிஎப் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிர படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா,கர்நாடகா என 10 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய நடவடிக்கையில், என்ஐஏ, அமலாக்கத்துறை மற்றும் மாநில காவல்துறை இணைந்து 100க்கும் மேற்பட்ட பிஎப்ஐ உறுப்பினர்களை கைது செய்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

Share this post with your friends