கடந்த 22 ஆம் தேதி தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் அமலாக்கத்துறை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு சார்ந்த பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டது.
இந்த அமைப்பின் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் களத்தில் இறங்கியது
தேசிய புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறை. இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள், பணம், டிஜிட்டல் கருவிகள் கைப்பற்றப்பட்டன என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்திய நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு சர்ச்சை புகார்கள் இந்த அமைப்பு மீது குவிந்து உள்ளது.
சுமார் 15 மாநிலங்களில் 93 இடங்களில் சோதனை நடைபெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்து நடந்த போராட்டங்களில் பல இடங்களில் கல்வீச்சு, வன்முறை சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறின. குறிப்பாக, தமிழ்நாடு, கேரளாவில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும் அதிகரித்தன.
இதன் விளைவாக மத்தியபிரதேசம், கர்நாடகா, அசாம், உத்தரபிரதேசம், டெல்லி, குஜராத், மராட்டியம், தெலுங்கானா ஆகிய 8 மாநிலங்களில் பிஎப்ஐ தொடர்புடைய இடங்களில் நேற்று 2-வது முறையாக சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போதும் பலர் கைது செய்யப்பட்டனர். தற்போது, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு இன்று அதிரடி தடை விதித்துள்ளது.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் ஆகியவை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்த மத்திய அரசு சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவில் இந்த அமைப்புகள் இயங்க தடை விதித்து உள்ளது.