கே ஜி ஃப் படம் பெற்று தந்த இமாலய வெற்றி தற்போது பல கன்னடப் படங்களுக்கு வழி வகுத்துள்ளது என்றே சொல்லலாம். தொடர்ந்து பல கன்னடப் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகின்றது. அப்படி வெளியான விக்ராந்த் ரோனா படமும் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் இணைந்துள்ளது ரிஷாப் ஷெட்டி இன் “காந்தாரா” திரைப்படம்.
கதைப்படி, மலைப்பகுதி அரசர் ஒருவர் மன நிம்மதியின்றி நாட்டை விட்டு, காட்டுக்குள் செல்கிறார். அங்கு மக்கள் வழிபடும் கற்சிலை ஒன்றைக் கண்டதும் நிம்மதி ஏற்படுகிறது. அவருக்குச் சொந்தமான மலைப்பகுதியை அந்தப் பகுதி மக்களுக்கு எழுதி கொடுத்துவிட்டு, சிலையை கொண்டு வருகிறார். அவர் குடும்பத்தைச் சேர்ந்த அடுத்த தலைமுறையினர் அந்த இடத்தை மீட்க முயற்சிக்கின்றனர்.
பூர்வகுடி மக்களிடம் நல்லவராக பேசி, அவர்களின் தெய்வம் மூலமாகவே அதை மீட்க முயற்சிக்கிறார் வாரிசு, தேவேந்திர சுட்டூரு. (அச்யுத் குமார்). அவர் திட்டம் அறியும் மண்ணின்மைந்தன் சிவா (ரிஷப் ஷெட்டி) என்னசெய்கிறார்? வாரிசின் ஆசை நிறைவேறியதா, இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
அரவிந்த் காஷ்யப் ஒளிப்பதிவில், அஜ்நீஷ் லோக்நாத் இசையில் ஒவ்வொரு ஃப்ரேம்மும் படம் பார்க்கும் அனைவரையும் மிரள விடுகிறது. வெறும் 16 கோடிகளில் எடுக்கப்பட்டு தற்போது 200 கோடிகளை அள்ளி வெற்றி நடை போட்டு வருகிறது இப்படம். இதனால் கன்னடப் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. இது மேலும் பல படங்களுக்கு வழி வகுத்துள்ளது எனலாம்.