Mnadu News

புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் நல்லடக்கம்

புதுச்சேரி, புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2-ந்தேதி மதியம் வீடு அருகே விளையாடிக் கொண்டிருந்தவள் திடீரென மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் ஒரே ஒரு கேமராவில் மட்டுமே சிறுமி நடமாட்டம் குறித்த வீடியோ பதிவாகி இருந்தது. எனவே அந்த சிறுமி சோலை நகர் பகுதியை விட்டு வெளியே செல்லவில்லை என்பது உறுதியானது. இதை வைத்து போலீசார் வீடு வீடாக சென்று மாணவி குறித்து விசாரித்தனர்.

மேலும் சந்தேகத்தின்பேரில் கஞ்சா ஆசாமிகள் 5 பேரை பிடித்து விசாரித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமியின் உடல் அவளது வீட்டின் அருகே உள்ள கால்வாயில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது.

இந்த சம்பவத்தில் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் சோலைநகர் பகுதியை சேர்ந்த கருணாஸ் (வயது 19), விவேகானந்தன் (57) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதில் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு கொடூரமாக கொன்று கால்வாயில் வீசியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சிறுமி கொலை வழக்கில் முழு விசாரணை நடத்த, ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை புதுச்சேரி அரசு நேற்று அமைத்தது. இதையடுத்து சிறுமி கொலை வழக்கு ஆவணங்களை சிறப்புக் குழு பெற்றுக்கொண்டு, விசாரணையை இன்று காலை தொடங்கியுள்ளது. சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் இருக்கும் மற்ற 5 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட 9-வயது சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பாப்பம்மாள் கோவில் இடுகாட்டில் சிறுமியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது. சிறுமியின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். புத்தகங்கள், விளையாட்டு பொம்மைகளுடன் சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக சிறுமியின் வீட்டில் இருந்து சுடுகாடு வரும் வரை சிறுமியின் உடலுக்கு வழிநெடுகிலும் நின்று மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

Share this post with your friends