Mnadu News

பொன்முடி பதவியேற்பதில் இழுபறி; தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி உள்ளார். இதன் காரணமாக திருக்கோவிலூர் தொகுதி காலியிடம் என்று தேர்தல் கமிஷனில் அறிவிக்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்பட்டு விட்டது. பொன்முடி எம்.எல்.ஏ.வாக வந்துள்ள நிலையில் அவரை மீண்டும் அமைச்சராக்க முடிவு செய்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இந்த கடிதத்துக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த வியாழக்கிழமை டெல்லி சென்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்னும் பொன்முடியை அமைச்சராக பதவி ஏற்க வரும்படி அழைப்பு விடுக்கவில்லை. இந்நிலையில் பொன்முடி அமைச்சர் பதவி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

முதலமைச்சரின் பரிந்துரைப்படி பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை உடனடியாக விசாரிக்க கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது. பொன்முடி பதவி ஏற்பு விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள திமுக, அமைச்சராக நியமிக்கப்படுபவரின் தகுதிப்பாடு குறித்த முதலமைச்சரின் மதிப்பீட்டை ஆளுநர் கேள்வி எழுப்ப முடியாது என்றும் தமிழக அரசுடன் ஆளுநர் கடைப்பிடிக்கும் மோதல் போக்கு கொஞ்சமும் வியப்பளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

Share this post with your friends