Mnadu News

மணக்குள விநாயகர் கோயில் யானை திடீர் மரணம்: பக்தர்கள் சோகம்.

புதுச்சேரியில் கடற்கரைப்பகுதியில் அருள்மிகு ஸ்ரீமணக்குள விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு கடந்த 1995 ஆம் ஆண்டில் 5 வயதான லட்சுமி யானை கொண்டுவரப்பட்டது. அன்று முதல் இன்று வரை விநாயகருக்கு சேவை செய்தும், கோயில் முன்பு யானை லட்சுமி நின்றுகொண்டு அங்கும் வரும் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் ஆசீர்வாதம் வழங்குவது, கோயில் விழாக்களில் வீதி உலாவின்போது முன்னே செல்வது, முக்கிய பூஜைகளில் பங்கேற்பது என லட்சுமியின் பங்கேற்பு முக்கியமாக இருந்தது.
அதோடு, புதுச்சேரி மக்களிடமும் பொதுமக்களிடமும் அன்பாக பழகக்கூடியது. பாசத்திற்குரிய பழகுவதற்கு இனிமையான நல் உள்ளம் கொண்டது யானை லட்சுமி.
லட்சுமி யானை கம்பீரமாக கோயில் முன்பு அசைந்தாடியபடி நிற்பதால் அதை வெளிநாட்டிலிருந்து வருவோரும் மிகவும் அன்பாக நேசித்து அதனிடம் ஆசீர்வாதம் பெற்று புகைப்படம் எடுப்பதையும் விரும்பினர்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக லட்சுமிக்கு அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது. அதனால், வனத்துறையினரும், கால்நடை மருத்துவர்களும் லட்சுமி யானையின் உடல்நலத்தை கண்காணித்து சிகிச்சை அளித்துவந்தனர். யானைப்பாகன்களும் லட்சுமி யானையை தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில், வழக்கம் போல் இன்று காலை யானையின் இருப்பிடமான ஈஸ்வரன் கோயிலில் இருந்து நடைப்பயிற்சிக்கு பாகன்கள் அழைத்துச் சென்றனர். அப்போது கல்வே கல்லூரி அருகே சாலையில் திடீரென நின்ற யானை பின் தயங்கித் தயங்கி நடந்தது. அதன்பின் தீடீரென கீழே விழுந்து இறந்தது. மருத்துவர்களும், யானை பாகனும்பல முயற்சிகள் எடுத்தும் பலனில்லை. யானை இறந்ததைத் தொடர்ந்து மணக்குள விநாயகர் கோயில் நடை சார்த்தப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த அமைச்சர் லட்சுமிநாராயணன் யானைக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கோயிலுக்கு எடுத்துச்செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் இறந்த யானை லட்சுமிக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் கண்ணீர்விட்டு அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this post with your friends