Mnadu News

மணீஷ் சிசோடியாவுக்கு மருத்துவப் பரிசோதனை: உடல்நிலை இயல்பாக இருப்பதாக தகவல்.

டெல்லியில் மதுபானக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதில் மோசடி நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லி துணை முதல் அமைச்சர் மணீஷ் சிசோடியாவின் இல்லம் மற்றும் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவரிடம் விசாரணையும் நடைபெற்றது. மூன்று மாதங்களுக்கு முன்பாக இது குறித்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதமும் சோதனை நடைபெற்ற நிலையில், மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியது.டெல்லி அரசின் பட்ஜெட் தொடர்பான வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் மதுபானக் கொள்கை மாற்ற மோசடி வழக்கில் சிபிஐக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டுமென மணீஷ் சிசோடியா தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் இரண்டாம் கட்ட விசாரணைக்கு கடந்த 19ஆம் தேதி ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில் மணீஷ் சிசோடியா டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் ஆஜரானார். இதையடுத்து சிசோடியாவை சிபிஐ கைது செய்தது.இந்நிலையில், டெல்லி துணை முதல் அமைச்சர்; மணீஷ் சிசோடியாவுக்கு மருத்துவர்கள் குழு மருத்துவப் பரிசோதனை செய்தனர். சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டைக் கருத்தில் கொண்டு சிசோடியாவை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாததால், மத்தியப் புலனாய்வுத் துறை தலைமையகத்தில் மருத்துவப் பரிசோதனை நடத்தியது. பரிசோதனையில் அவரின் உடல்நிலை இயல்பாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this post with your friends