Mnadu News

மதுரையில் ஃபாஸ்ட் இணையதள சேவை ஆட்சியர் தகவல்!

மதுரை மாவட்டத்தில் உள்ள சுமார் 420 கிராம ஊராட்சிகளிலும் இணையதள வசதி வழங்கும் பாரத நெட் திட்டமானது, (TANFINET) மூலம் தற்போது முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இணையதள இணைப்பு வழங்கும் பணியானது வருகிற செப்டம்பர் மாதம் முதல் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கண்ணாடி இழை இணைப்பானது 85 சதவீதம் மின்கம்பங்கள் மூலமாகவும், 15 சதவீதம் தரை வழியாகவும் இணைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்திற்கான உபகரணங்கள், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. இந்த உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ள அறையானது, சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரால் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த உபகரணங்களை பாதுகாத்திடவும், தடையில்லா மின் வசதி உள்ளதை உறுதி செய்திடவும், இணையதள சேவைக்காக நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள அறையில் வேறு தேவையற்ற பொருட்கள் வைக்கப்படாமல் இருப்பதை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு, சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலாளர் அரசாணையின்படி பொறுப்பாக்கப்பட்டு உள்ளார்.

இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் இணையதள வசதிகளை பெற முடியும். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் பாரத நெட் திட்டத்தின் கீழ் உள்ள இணையதள மையங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்கலம், யு.பி.எஸ்., ரவுட்டர், ரேக் மற்றும் கண்ணாடி இழை உள்ளிட்ட உபகரணங்கள் என அனைத்தும் அரசின் உடைமைகளாகும். இந்த உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் காவல் துறையினர் மூலம் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share this post with your friends