மதுரை மாவட்டம், அண்ணா நகரில் இருக்கும், மருதுபாண்டியர் நகரின், ராஜராஜன் தெருவை சேர்ந்தவர்கள் பாண்டியன்- வாசுகி. பாண்டியன் சுகாதாரத்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த தம்பதிக்கு திருமணம் ஆகாத, 45 வயதில் உமாதேவி என்கிற மகளும், 42 வயதில் கோதண்டபாணி என்கிற மகனும் உள்ளனர். இந்த நிலையில் பாண்டியன் மற்றும் வாசுகிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, 15 ஆண்டுகளுக்கு முன் பாண்டியன் மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் வாசுகி, உமாதேவி, கோதண்டபாணி மூவரும் தனியே வசித்து வந்துள்ளனர். மேலும், பிரிந்து சென்ற பாண்டியன் குறித்து எந்த தகவலும் இல்லை எனவும் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து இரு பிள்ளைகளும் கிடைத்த வேலையை செய்துக் கொண்டு தாயை தங்கள் பராமரிப்பில் முறையாக கவனித்து வந்துள்ளனர். இப்படி சில காலம் செல்ல, ஒரு கட்டத்தில் இவர்களின் குடும்பத்தில் வறுமை தலைவிரித்தாட துவங்கியது. இதனால், தங்களிடம் வைத்திருந்த நகை,பாத்திரங்களை அடகு வைத்து அன்றாடம் வாழ்வை நகர்த்தி வந்துள்ளனர். மேலும், பாண்டியன் விட்டு சென்ற சோகம் இவர்கள் மனதில் நீங்காது வாட்டி வந்தது.
இந்த நிலையில் பல மாதங்களாகவே இவர்கள் மூவரும் வீட்டுச் சுவற்றில் தனிமையில் இருந்துள்ளனர். அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்களுக்கு இவர்கள் வீட்டின் பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில், உடனடியாக அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், வாசுகி மற்றும் உமாதேவி ஆகிய இருவரும் விஷம் அருந்தி இறந்த நிலையிலும், கோதண்டபாணி தூக்கில் தொங்கிய நிலையிலும் அழுகிய நிலையில் மூன்று உடல்கள் கிடந்துள்ளன.
மூவரின் உடல்களை மீட்ட போலீசார் தற்கொலைக்கான காரணம் வறுமை தானா அல்லது வேறு ஏதும் காரணமா, ஏதாவது கடிதம் உள்ளதா போன்ற பல கோணங்களில் விசாரணையை துவக்கி உள்ளனர். மேலும், தற்கொலைக்கான காரணம் புலப்படாத நிலையில், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
ஒரு குடும்பமே வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஒருசேர ஏற்படுத்தி உள்ளது.