Mnadu News

மயிலாடுதுறையில் புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு டிசம்பர் 28-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது மாயூரநாதர் கீழ வீதி வணிகவரி அலுவலக கட்டிடத்தில் தற்காலிக கலெக்டர் அலுவலகம் இயங்கி வருகிறது.

மயிலாடுதுறை மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்காக மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில்தோட்டம் பால்பண்ணை பகுதியில் 13 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு ரூ.114 கோடியே 48 லட்சம் மதிப்பில் தரைத்தளம் மற்றும் 7 தளங்கள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு வந்தது.

கட்டிட பணிகள் நிறைவடைந்து புதிய ஆட்சியர் அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய ஆட்சியர் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

முன்னதாக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த முதல்-அமைச்சருக்கு காவல்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அமைச்சர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தகங்கள் வழங்கி வரவேற்றனர்.

தொடர்ந்து நாகப்பட்டினத்தில் 700 படுக்கைகளுடன் ரூ.254 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆஸ்பத்திரி, மயிலாடுதுறையில் ரூ.3 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கட்டமைப்பு, திருவாரூர் மாவட்டத்தில் ரூ.4 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கட்டமைப்புகள், நாகூர் பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மருத்துவமனை கட்டமைப்பு, குற்றாலம் பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கட்டமைப்புகளையும் திறந்து வைத்தார். பின்னர், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Share this post with your friends