நாட்டில் தற்போது யுத்தமும் இல்லை பயங்கரவாதமும் இல்லை ஆகையால் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் அவசியமில்லை என முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பயத்தில் இருக்கும் ஆட்சியாளர்களுக்கே அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தேவை. இப்படி சென்றால், ஆட்சியாளர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை ஏற்படுத்த வேண்டியேற்படும். அரசாங்கம் மரண அச்சத்தில் வாழ்ந்து வருகிறது.
நாட்டில் யுத்தம் இல்லை. பயங்கரவாதமில்லை. மக்களின் வாழ்வுக்கு எந்த இடையூறும் அச்சுறுத்தலும் இல்லை. எனினும் ஆட்சியாளர்களுக்கு மரண பயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் வீதியில் செல்ல அஞ்சுகின்றனர்.
பயத்தில் வாழும் ஆட்சியாளர்களுக்கு நடமாடும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை ஏற்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் அவர்களுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் பாதுகாப்பு தேவைப்படும்” என்றார்
இந்நிலையில், புலனாய்வுப் பிரிவினரின் பரிந்துரைக்கு அமையவே அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் அதிபரோ, பிரதமரோ, அரசாங்கமோ விரும்பியபடி அதியுயர் பாதுகாப்பு வலயங்களை ஏற்படுத்தவில்லை. இது காலத்தின் ஒரு நிர்ப்பந்தம். புலனாய்வுப் பிரிவினர் வழங்கும் அறிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை அதிபரோ, பிரதமரோ அல்லது அரசாங்கமோ கவனத்தில் கொள்ளாது செயற்பட முடியாது எனவும் அரவிந்தகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.