இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்கான நகர்வுகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
இதற்கமைய, இலங்கையை நடுத்தர வருமானம் பெறும் நாடு என்ற அந்தஸ்திலிருந்து குறைந்த வருமானம் பெறும் நாடாக மாற்றுவதற்கான யோசனை சிறிலங்கா அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

உலக வங்கியின் கிளையான சர்வதேச அபிவிருத்தி சங்கத்திடமிருந்து நிவாரண அடிப்படையில் நிதியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கையை குறைந்த வருமானம் பெறும் நாடாக மாற்றுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் தொடர்பில் அமைச்சரவைக்கு விளக்கமளித்து அனுமதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன், பின்னர் இதுதொடர்பில் உலக வங்கிக்கு அறிவிக்கப்படவுள்ளது.
அந்நியச்செலாவணி கையிருப்பு பற்றாக்குறை, பண வீக்கம், கடன்களை மீள செலுத்துவத்திலுள்ள பிரச்சனைகளை கருத்தில்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் அரச அதிகாரிகளை மேற்கோள் காட்டி இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை பிரஜைகளுக்கு பெரும்பாலான மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களை பெறுவதற்கான சந்தர்ப்பம் இல்லாமல்போயுள்ளதால், அவர்கள் மனிதாபிமான நெருக்கடியை சந்தித்துள்ளதாக டிரெக்ட் ரிலீப் என்ற நிவாரண அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையின் நிலைமைகள் மிகவும் பாரதூரமானதென சிறிலங்கா பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனான கலந்துரையாடலின் பின்னர் டிரெக்ட் ரிலீப் அமைப்பின் நேரடி நிவாரண சேவைகள் முகாமையாளர் கிறிஸ் அல்லேவே கூறியுள்ளார்.