Mnadu News

மீண்டும் இரு உயிர்களை பறித்த நீட்! சென்னையில் அரங்கேறிய சோகம்!

சென்னையை அடுத்த குரோம்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் போட்டோகிராபர் செல்வம் என்பவரின் மகன் 19 வயதான ஜெகதீஸ்வரன் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பில் 424 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.

இந்த நிலையில், மருத்துவ படிப்பில் அதிக ஆர்வம் இருந்ததால் இரண்டு ஆண்டுகளாக  நீட் தேர்வு எழுதினார். ஆனால் தொடர்ந்து இரண்டு முறையும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. எனினும் மீண்டும் மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதி அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்குவேன் என தந்தையிடம் நம்பிக்கையோடு கூறி உள்ளார். இதற்காக நீட் பயிற்சி மையத்துக்கு ஆன்லைனில் பணமும் கட்டினார்.

மேலும், நீட் பயிற்சி மையத்தில் தன்னுடன் படித்த மாணவர்கள் சிலர் 450 மதிப்பெண்கள் பெற்றும் அரசு ஒதுக்கீடு கிடைக்காததால் என்ஜினீயரிங் படிப்பை தேர்ந்தெடுத்து சேர்ந்துள்ளனர். அதில், இரண்டு  பேர் தனியார் கல்லூரியில் அதிக பணம் கட்டி நிர்வாக ஒதுக்கீட்டு சீட் பெற்று எம்.பி.பி.எஸ். சேர்ந்துள்ளனர். இதனால் நண்பர்கள் யாரும் தன்னுடன் மீண்டும் நீட் தேர்வு எழுதவில்லை என்பதால் பெரும் குழப்பத்தில் மன ரீதியான துன்பத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், மன அழுத்தத்தில் இருந்த ஜெகதீஸ்வரன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்து வந்த சிட்லப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகதீஸ்வரனின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகன் இறந்த துக்கம் தாளாமல் இருந்த செல்வம் இன்று அதிகாலை மாடியில் உள்ள அறையில் கேபிள் வயரில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தாம்பரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நேற்று தான் மகனின் இறுதி சடங்குகள் நடைபெற்ற நிலையில், இன்று தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Share this post with your friends