Mnadu News

மீண்டும் பிரேசில் அதிபரானார் லூலா டி சில்வா.

உலகின் 4-ஆவது பெரிய ஜனநாயக நாடான பிரேசிலில் அதிபர் தேர்தல் கடந்த 2-ஆம் தேதி நடைபெற்றது. இதில், வலதுசாரி தலைவரான அதிபர் ஜெயிர் பொல்சொனாரோ, இடதுசாரி தொழிலாளர் கட்சித் தலைவரான முன்னாள் அதிபர் லூலா டி சில்வா உள்பட 11 பேர் போட்டியிட்டனர்.
இதில், லூலா டி சில்வா 47 புள்ளி 9 சதவீத வாக்குகளும், பொல்சொனாரோ 43 புள்ளி 6 சதவீத வாக்குகளும் பெற்றனர். பிரேஸில் அரசமைப்புச் சட்டப்படி அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 50 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் முதல் இரு இடங்களைப் பெற்றவர்கள் இரண்டாம் சுற்று தேர்தலில் போட்டியிடுவர்.
அதன்படி, இரண்டாவது சுற்று தேர்தல் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டதில், வெற்றிக்கு தேவையான 50 சதவிகிதத்தை லூலா பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பதிவான வாக்குகளில் 98 சதவிகிதம் எண்ணப்பட்ட நிலையில், லூலா 50 புள்ளி 8 சதவிகித வாக்குகளும், பொல்சொனாரோ 49பு ள்ளி 2 சதவிகித வாக்குகளும் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், மூன்றாவது முறையாக இடதுசாரி கட்சியின் தலைவர் லூலா டி சில்வா அதிபராவது உறுதியாகியுள்ளது. இவருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share this post with your friends