தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
கிருஷ்ணகிரி பா.ஜ.க. வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓசூரில் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ள பாஜகவை வருகின்ற மக்களவை தேர்தலில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு பறவைகள் வருவதுபோல பிரதமர் மோடி சீசன் காலத்தில் மட்டும் தமிழ்நாட்டிற்கு வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். அந்த வார்த்தையை பயன்படுத்துவதே தவறு என்று கண்டனம் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து விட்டதாக குற்றம் சாட்டிய நிர்மலா சீதாராமன், போதைப் பொருட்கள் மூலம் கோடிக்கணக்கான பணத்தை திமுக சம்பாதித்துள்ளதாகவும், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் திமுக குடும்பத்துடன் தொடர்பு வைத்துள்ளதற்கு நிறைய “ஆதாரம்” உள்ளது என கடுமையாக சாடினார்.