முந்தைய 2 நிலநடுக்கங்களின் நினைவுநாளில் மெக்சிகோவை பயங்கர நிலநடுக்கம் தாக்கியது.
மெக்சிகோ சிட்டி, வடஅமெரிக்க நாடான மெக்சிகோ நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவிதட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கம் வாடிக்கையான ஒன்றாக உள்ளது. எனினும் சில சமயங்களில் மிகவும் பயங்கரமான நிலநடுக்கம் அந்த நாட்டை புரட்டி போட்டு வருகிறது. அப்படி கடந்த 1985-ம் ஆண்டு செப்டம்பர் 19-ந்தேதி மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் ரிக்டர் அளவுகோலில் 8.0 புள்ளிகளாக ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அந்த நாட்டை சின்னபின்னமாக்கியது. இந்த நிலநடுக்கத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர். அதன் பின்னர் 2017-ம் ஆண்டில் அதே செப்டம்பர் 19-ந்தேதி மெக்சிகோவின் பியூப்லா நகரில் ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 300 பேர் பலியாகினர். இப்படி நாட்டை உலுக்கிய 2 நிலநடுக்கங்களின் நினைவு நாள் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தலைநகர் மெக்சிகோ சிட்டியில் நிலநடுக்க மீட்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.