ரஷ்யாவின் தென்மேற்கே உக்ரைனுக்கு அருகே உள்ள எயிஸ்க் நகரின் ஒரு குடியிருப்புக் கட்டிடம் மீது, ரஷிய ராணுவ விமானம் ஒன்று யாரும் எதிர்பாராத நேரத்தில் தீப்பிடித்தபடி பறந்து வந்து மோதி விபத்திற்கு உள்ளானது.
தீ பிடித்ததில் கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து 9 வது தளம் வரை தீ மளமளவென பற்றியது. இதில் அனைத்து தளங்களிலும் உள்ள குடியிருப்புகள் சேதமடைந்த நிலையில், சுமார் 360 பேர் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், சுகோய்-34 ரக ஜெட் போர் விமானத்தின் என்ஜினில் தீப்பிடித்த நிலையில் விபத்து நிகழ்ந்துள்ளது என தெரிய வந்துள்ளது. இதில் விமானி குதித்து உயிர் பிழைத்து விட்டார்.
இந்நிலையில் இந்த கொடூர விபத்தில் 3 குழந்தைகள் உள்பட மொத்த 13 பேர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது. 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என மீட்புப்படை அதிகாரிகள் தரப்பில்
கூறப்பட்டுள்ளது.