Mnadu News

ரஷியாவை தாக்க முயன்றால் கடுமையான பதிலடி கிடைக்கும்: புதின் எச்சரிக்கை.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. 7 மாதங்களைக் கடந்து போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ரஷியாவையும் அந்த நாட்டால் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தையும் இணைக்கும் பாலம், கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட லாரி குண்டுவெடிப்பில் சேதப்படுத்தப்பட்டது.
இதனால், அந்தத் தீவுடன் ரஷியாவுக்கு இருந்த ஒரே சாலை வழி விநியோக இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன்தான் காரணம் என்று ரஷியா குற்றம்சாட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை முதல் உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக ஏவுகணை மூலம் ரஷியப் படைகள் தாக்குதல் நடத்தினர். இதில், பலர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் குறித்து பேசிய புதின் ,உக்ரைனின் ஆற்றல், ராணுவம் மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் ஏவுகணை மூலம் இன்று தாக்கப்பட்டன. ரஷியப் பகுதிகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயன்றால் தக்க பதிலடி வழங்கப்படும். கிரீமியா பாலம் குண்டுவெடிப்பில் தகர்க்கப்பட்டது ஒரு பயங்கரவாத செயல். இந்த தாக்குதலுக்கு பின்னணியில், உக்ரைனின் சிறப்புப் படைகள் உள்ளன. மேலும், துருக்கி குழாய்வழியையும் தகர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ரஷியாவுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்தால், பதிலடி கடுமையாக இருக்கும் என்று எச்சரித்தார்.

Share this post with your friends