Mnadu News

ராஜஸ்தானில் பள்ளி சிறுமி கொலை! பள்ளி ஆசிரியரின் வெறிச்செயல்!

ராஜஸ்தான் மாநிலம், சவாய் மாதோபூர் மாவட்டத்தைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி ஆகஸ்ட் 8 ஆம் தேதி காணாமல் போனார். இதுகுறித்து அவரது தந்தை, போன்லி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில், எனது மகளை பள்ளி ஆசிரியர் ராம்ரதன் மீனா கடத்தினார் என்று புகாரில் தெரிவித்திருந்தார். இதையடுத்து போலீஸார் மாணவியையும், ஆசிரியரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில், மாதோபூரில் உள்ள ஒரு கிணற்றில் காணாமல் போன மாணவியின் சடலம் மிதந்தது. இதையடுத்து மாணவியின் உடலை மீட்ட அவரது குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர், அந்த உடலுடன் பள்ளிக்குச் சென்று போராட்டம் நடத்தினர். ஆசிரியர் ராம்ரதன் மீனா, மாணவியை வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டார் என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.

அத்துடன் சம்பந்தப்பட்ட குற்றவாளியை உடனடியாக கைது செய்வதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து அவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதை கிராம மக்கள் ஏற்கவில்லை.

இதையடுத்து ஆசிரியர் ராம்ரதன் மீனா மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார். ஆனால், கைது செய்யப்பட்ட ஆசிரியர் மீது பாலியல் மற்றும் கொலை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று கிராம மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

பொதுமக்களின் போராட்டம் காரணமாக இறந்த மாணவியின் உடலை உடனடியாக பிரேத பரிசோதனை செய்ய முடியவில்லை என போலீஸார் தெரிவித்தனர். இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டதாக ராஜஸ்தான் சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் ராஜேந்திர ரத்தோர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆசிரியரால் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this post with your friends