Mnadu News

ராமநாதபுரம்: மண்டபம் அருகே கடலிலிருந்து 12 கிலோ தங்கம் மீட்பு.

இலங்கையிலிருந்து மண்டபம் வழியாக ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தங்கக் கட்டிகள் கடத்தி வரப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, கடலோரக் காவல் படையினரும், மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகளும் மண்டபம் அருகே கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இலங்கையிலிருந்து மண்டபம் நோக்கி நாட்டுப் படகு ஒன்று வந்தது. அதிகாரிகள் வருவதைக் கண்டதும் படகிலிருந்தவர்கள் மூட்டை ஒன்றை கடலுக்குள் தூக்கி வீசினர். இதையறிந்த அதிகாரிகள் படகிலிருந்த 3 பேரையும் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் 3 பேரும் மண்டபம் பொங்காலி தெருவைச் சேர்ந்த அமீர்அலியின் மகன்கள் நாகூர்கனி (30), அன்வர் (25), இப்ராஹிம் மகன் மன்சூர்அலி (25) எனத் தெரிய வந்தது. கடலில் வீசப்பட்ட மூட்டையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகள் இருக்கலாம் எனக் கருதி, 10-க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்களின் உதவியுடன் தேடுதல் பணி நடைபெற்றது. இதற்கிடையே, கைது செய்யப்பட்ட மூன்று பேரும், தங்களை படகில் அழைத்துச் சென்றால், தங்கத்தை எங்கே வீசினோம் என்று அடையாளம் காட்டுவோம் என்று கூறியிருந்தனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் இதுவரை கடலில் வீசப்பட்ட 12 கிலோ தங்கக் கட்டிகள்இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தொடர்ந்து நடுக்கடலில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. நீச்சல் வீரர்கள் தங்கக் கட்டிகளை தேடிவருகிறார்கள்.

Share this post with your friends