திருச்சி ஜமால் முகமது கல்லூரியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், பருவகால பேரிடர் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, காய்ச்சல் முகாம்கள், பொது சுகாதாரப் பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வு கூட்டம் இன்று காலை தொடங்கியது. தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு இக் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் உள்ளிட்ட மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த சுகாதாரத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ,
தமிழகம் முழுவதும் உள்ள 385 ஒன்றியங்கள், வட்டாரங்களைச் சேர்ந்த மருத்துவ அலுவலர்கள் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை உயர் மருத்துவ அலுவலர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், பருவ மழையால் ஏற்படும் பல்வேறு நோய் தொற்றுகள் காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து மக்களை காக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுகின்றன.
குறிப்பாக, தமிழக முழுவதும் 21 மாநகராட்சிகள் 63 நகராட்சிகளில் அமைக்கப்பட்டு வரும் 708 நகர் நல மையங்கள் மற்றும் தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வரும் 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள், 32 இடங்களில் அமைந்துள்ள மருந்து கிடங்குகள், மற்றும் புதிதாக அமைக்கப்பட உள்ள 5 கிடங்குகள், வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் ஆயிரத்து 250 இடங்களில் நடத்தப்பட்டு வரும் மருத்துவ சோதனை முகாம்கள், கொரோனா தடுப்பூசி முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்தும், தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்படுகிறது.
திருச்சி அரசு மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதற்கான ஆணை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இனி நரம்பியல் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். மருத்துவத் துறையை பொறுத்தவரையில் அரசு மருத்துவர்கள் தங்களது விருப்பத்தின் பேரில் பணிமாற்று ஆணைகள் பெற்று பணியாற்றி வருகின்றனர்.
மருத்துவ சங்கங்கள் இடையே இரு பெரும் சங்கங்கள் அரசாணை 384 மற்றும் 293 ஆணைகளை அமல்படுத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக 18 முறை ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், இரு ஆணைகளிலும் உள்ள சரத்துக்களை நடைமுறைப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் ஆயிரத்து 303, ஆம்புலன்ஸ்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதில் கிராமப்புறங்களுக்கு ஆம்புலன்ஸ் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது. அது போன்று புகார்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மருத்துவர்களுக்கு மேல் படிப்பிற்கு உரிய சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கரோனா தடுப்பூசிகளை பொறுத்தவரை முதல் தவணை 96 சதவீதமும் இரண்டாவது தவணை 92 சதவீதமும் செலுத்தப்பட்டு விட்டது. சிறார்களுக்கான தடுப்பூசிகளும் 90 சதவீதம்செலுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கென காஞ்சிபுரத்தில். 300 கோடி ரூபாய் மதிப்பிலான சிகிச்சை மையம் தயாராகி வருகின்றது. அடுத்த ஓராண்டில் அதன் பணிகள் முடித்து அங்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் படுக்கைகள் உரிய விகிதத்தில் உள்ளன. இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் தெரியாமல் படுக்கைகள் பற்றாக்குறை என சிலர் கூறுவது தவறு என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.