Mnadu News

வீரசைவ மடத்தின் பழைய மடாதிபதியே தொடர்ந்து நீடிக்கலாம்: கோட்டாட்சியர்

கும்பகோணம் வீரசைவ மடத்தில் பழைய மடாதிபதி நீலகண்ட சுவாமி தேசிகர் தொடர்ந்து மடாதிபதியாக இருக்கலாம் என கோட்டாட்சியர் வீராசாமி உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே அமைந்துள்ளது வீரசைவ மடம். இந்த மடத்தின் மடாபதியான நீலகண்ட சுவாமி தேசிகர் மீது முறைகேடு புகார்கள் எழுந்ததையடுத்து புதிய மடாதிபதியாக பசவ முருக சாரங்க தேசிகர் நியமிக்கப்பட்டதாக கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மடத்தை சேர்ந்தவர்கள் அறிவித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நீலகண்ட தேசிகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மடத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்றார். இதனால் இரு தரப்பு ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து இருவரும் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், கோட்டாட்சியர் வீராசாமி தலைமையில் இன்று சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் நீலகண்ட சாரங்க தேசிகர் சுவாமிகளே மடாதிபதியாக தொடர்ந்து பதவி வகிக்கலாம் என கோட்டாட்சியர் வீராசாமி அறிவித்து உத்தரவிட்டார். இதையடுத்து, பசவமுருக சாரங்க தேசிகர் சுவாமிகள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கோட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் நீலகண்ட சுவாமிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டி பேச்சுவார்த்தையை புறக்கணித்தனர். மேலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்துள்ளனர்.

Share this post with your friends