சுமார் 10 வருடங்களுக்கு பிறகு சொல்லிக்கொள்ளும் படியான வெற்றியை
மாநாடு படம் வெங்கட் பிரபுவுக்கு பெற்று தந்தது. இந்த படம் சிம்புவுக்கு மிக பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்றும் சொல்லலாம்.
சில மாதங்களுக்கு முன் வெளியான வெங்கட் பிரபுவின் 10 வது படமான மன்மத லீலை தரமான வெற்றியை பதிவு செய்தது எனலாம். அசோக் செல்வன், ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் உள்ளிட்ட பலர் லீட் ரோல்களில் நடித்து இருந்தனர்.
ஜாலி இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் படம் என்சி 22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
இவர்களோடு சரத்குமார், அரவிந்த் சாமி, வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இந்திய திரையுலகின் முன்னணி இசை அமைப்பாளர் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர். என்சி 22 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது, இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, தற்போது இந்தப் படத்தின் முக்கியமான காட்சிகள் மைசூரை சுற்றியுள்ள அழகிய இடங்களில் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் வெளியிட்டு உள்ளனர்.