வெளிநாடுகளில் மெலனின் குறைபாட்டால் கடற்கரையில் சன் பாத் (Sun bath) எடுப்பதற்கே நிறைய நேரங்களை சிலவிடுவார். ஆனால் நமக்கோ அது இயற்கையிழையே கிடைக்கிறது. கோடைக்காலம் வந்தாலே சூரியனிடமிருந்து விலகி ஓடுகிறோம். சன்ஸ்க்ரீன் கொண்டு சருமத்தை மறைத்துவிடுகிறோம். ஆனால் சூரிய ஒளி வாழ்க்கை முறைக்கும், உடலுக்கும் எவ்வளவு அத்தியாவசியம் என்பதை மறந்துவிடுகிறோம்.
வைட்டமின்-டி என்பது நேரடி சூரிய ஒளியிடமிருந்து பெறும் ஒரு ஆதாரம் ஆகும். இந்த வைட்டமின் சூரிய ஒளி வைட்டமின் என்று அழைக்கப்படுகிறது. சமீப வருடங்களாகவே வைட்டமின்-டி குறைபாட்டை கொண்டிருப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க தேவையான அளவு வைட்டமின்-டி அளவை உடல் உற்பத்தி செய்ய முடியாது என்பதே இதற்கு முதன்மை காரணமாக இருக்கலாம். இந்த வைட்டமின்-டி குறைபாட்டுக்கான காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.
நவீன் தொழில்நுட்பங்களுக்கு பழகிவிட்ட உடல் ஆரோக்கியம் இயற்கையான வாழ்க்கையிலிருந்து விலகி செல்ல வைத்திருக்கிறது. மின் விசிறியில் இருந்து குளிர்சாதனத்திற்கு நாம் பழகி போனோம் என்பதே மறுக்க முடியாத உண்மை. வைட்டமின்-டி நமது நல்வாழ்வுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்து ஆகும். இது கொழுப்பு கரையக்கூடிய செக்கோஸ்டீராய்டுகளின் குழுவாகும். இது கால்சியம் மற்றும் பாஸ்பேட்டின் குடல் உறிஞ்சுதலை அதிகரிக்க உதவுகிறது. வைட்டமின்-டி, மற்ற வைட்டமின்கள் போல் உணவில் இருந்து பெறமுடியாது. சூரிய ஒளியில் வெளிப்படும் போது மட்டுமே உடலில் வைட்டமின்-டி தயாரிக்கப்படுகிறது.
சூரிய ஒளியில் உள்ள யு.வி கதிர்கள் சருமத்தில் உள்ள கொழுப்பை வைட்டமின்-டி ஆக மாற்றுகிறது. பொதுவான நிறத்தை கொண்டிருக்கும் நபருக்கு முகத்தில் மற்றும் முன் கைகளின் நடுவில் நாள் முழுவதும் 2 முதல் 3 முறை சூரியன் படும் போது அதுவே அவர்களுக்கு தேவையான வைட்டமின்-டி தயாரிக்க போதுமானதாகிறது. நிறைய உடல் பிரச்சனைகளுக்கு டாக்டர் பரிந்துரைக்கும் மருந்து, காலையில் வரும் சூரிய ஒளிதான். அது நம் உடலை பாதுகாத்து புத்துணர்ச்சியாக வைத்திருப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
வைட்டமின் டி குறைபாட்டுக்கு என்ன காரணம் என்பதை பார்க்கலாம். வீட்டுக்குள்ளேயே அடங்கியிருப்பவர்கள் சூரிய ஒளி பெற முடியாத காரணத்தினால் சிலருக்கு வைட்டமின்-டி குறைபாடு உண்டாகும். பொதுவாக சரும புற்றுநோய் மற்றும் புற ஊதாக்கதிர்களால் ஏற்படும் பிற பாதிப்புகளை தடுக்க சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவோம். அதில் SPF 30 சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவது சருமத்தில் வைட்டமின்-டி தொகுப்பை 95% அதிகமாக குறைக்கிறது.
இலையுதிர்காலம் மற்றும் குளிர்காலத்தில் மக்களுக்கு போதுமான வைட்டமின்-டி கிடைக்காது. அதனால் சூரிய ஒளியில் வாரத்தில் இரண்டு முறை 10 முதல் 15 நிமிடங்கள் வெளிப்படுவது போதுமான அளவு வைட்டமின்-டி தயாரிக்க உதவுகிறது. பொதுவான நிற தோல் கொண்டவர்கள் கருமையான தோல் கொண்டிருப்பவர்களை ஒப்பிடும் போது குறைவான மெலனின் கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களுக்கே அதிக சூரிய ஒளி தேவைப்படுகிறது.
ஏறத்தாழ 200 மரபணுக்களின் செயல்பாடுகளை வைட்டமின்-டி தான் கட்டுப்படுத்துகிறது. உடல் வளர்ச்சியிலும் இந்த வைட்டமின் மிக முக்கியப் பங்காற்றுகிறது. சராசரியாக உடலில் வைட்டமின்-டி 30 நானோகிராம் அளவுக்கு இருக்க வேண்டும். 30 நானோகிராமுக்குக் குறைவாக இருந்தால், போதிய அளவு வைட்டமின்-டி இல்லை என்று பொருள். 20 முதல் 29 நானோகிராம் வரை இருப்பவர்களுக்கு சிகிச்சையோ, மருந்துகளோ தேவையில்லை. வாழ்வியல் மாற்றங்கள் மட்டுமே பரிந்துரைக்கப்படும். 20 நானோகிராமுக்கும் குறைவாக இருப்பதையே `வைட்டமின்-டி குறைபாடு’ என்கிறோம்.
இத்தகைய சூழலில்தான் சிகிச்சை தேவைப்படும். உடல்வலி, மூட்டுவலி, அதிக உடல்சோர்வு, மிகவும் பலவீனமாகக் காணப்படுவது போன்றவை வைட்டமின்-டி குறைபாட்டின் சில முக்கிய அறிகுறிகள் ஆகும்.