காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியிலுள்ள டோல்கேட்டை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களையும், காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் சோதனை மேற்கொண்டார். அப்போது சென்னையில் இருந்து சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சாலை வழியாக பாண்டிச்சேரி பதிவு எண் கொண்ட ஆம்னி சொகுசு பேருந்து ஒன்று டோல்கேட்டை கடக்க முயற்சித்தது. அப்பேருந்தினை மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் தடுத்து நிறுத்தி, ஆவணங்களை சரி பார்த்தப்பொழுது முறையான ஆவணங்கள் இன்றி, பாண்டிச்சேரி பதிவு எண் கொண்ட வாகனம் தமிழகத்திற்கு இதுவரை எவ்வித வரியினையும் செலுத்தாமல் மோசடியாக இயக்கப்பட்டு வந்தது அம்பலமானது.

மேலும் இதுவரையில் சுமார் ரூ. 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை வரியாக போக்குவரத்து துறைக்கு செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளதாலும், வரி செலுத்தாமல் மோசடியாக இயக்கப்பட்டதாலும் பாண்டிச்சேரி பதிவு எண் கொண்ட அந்த ஆம்னி சொகுசு பேருந்தினை பறிமுதல் செய்து காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.

மேலும் இவ்வாறு நடைபெற்ற ஆம்னி சொகுசு பேருந்துகள் வாகன சோதனையில் 12 ஆம்னி பேருந்துகள் முறையாக ஆவணங்கள் இன்றியும், விதிமுறையை மீறியதாகவும், பேருந்து மேல் அதிக பாரம் போன்றவற்றின் கீழ் உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.