Mnadu News

ஹூஸ்டன் பல்.கலையில் தமிழ் இருக்கை: ரூ.2.50 கோடி காசோலை வழங்கிய முதல் அமைச்சர்.

தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட 3 இலட்சம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்புத் தொகையான 2 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் மற்றும் செயலாளர் பெருமாள் அண்ணாமலை ஆகியோரிடம் வழங்கினார்.அதேபோல்,கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரம் பெயரில், அன்னாரின் 150ஆம் பிறந்த நாளினை முன்னிட்டு 3.9.2021 அன்று உருவாக்கப்பட்ட புதிய விருதினை முதன்முதலாக மும்பை, முந்தரா, சென்னை, காமராசர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களை உலகத் தரத்துக்கு உயர்த்தி பல சாதனைகளைச் செய்தவருமான கப்பல் பொறியியல் தொழில்நுட்ப வித்தகர் பொறிஞர் எண்ணரசு கருநேசனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விருதுத் தொகையாக 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்வில், தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) முனைவர் ம.சு. சண்முகம், மற்றும் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந. அருள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share this post with your friends