Mnadu News

அதிமுக கொடி, சின்னம் விவகாரம்; ஓபிஎஸ்-க்கு விதித்த தடை தொடரும்

அ.தி.மு.க. பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடைவிதிக்க கோரி எதிர்க்கட்சி தலைவரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதிஷ்குமார் முன்பு நடைபெற்றது. அப்போது, கட்சியில் இருந்து நீக்கப்பட்டும் அதே பதவியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி வருகிறார் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், அதிமுக சின்னம், பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடையை ரத்து செய்யக்கோரி ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும் அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் ஓபிஎஸ் தரப்பு, தனி நீதிபதி முன் உரிய மனு தாக்கல் செய்யலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Share this post with your friends