Mnadu News

ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி வழக்கு.

தந்தை பெரியார் திராவிடர் கழக காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் கண்ணதாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்த மனுவில், ‘2021 செப்டம்பர் 18 இல் தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்ற நாளில் இருந்தே அவர் பிரச்னைக்குரிய நபராக இருந்து வருகிறார்.
பொது நிகழ்ச்சிகளில் சனாதன தர்மம் பற்றியும் இந்து கொள்கை பற்றியும் திராவிட கொள்கைகளுக்கு எதிராகவும் பேசி வருகிறார்.
தமிழக அரசு அனுப்பும் கோப்புகளுக்கு கையெழுத்திடாமல் காலம் தாழ்த்தி வருகிறார். இது பொதுமக்களின் நலனுக்கு எதிராக உள்ளது.
புதுவை ஆரோவில் பவுண்டேஷன் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் எந்தவொரு லாபம் தரும் நிறுவனத்தின் தலைவராக இருக்கக்கூடாது என்பதால் இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. எனவே, அவர் ஆளுநர் பதவியில் இருக்க தகுதியற்றவர். அவரை ஆளுநர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்’ என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் தற்போது மசோதா காலாவதியாகியுள்ளது தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends