இத்தாலியில் தலைநகர் ரோமுக்கு பிறகு பெரிய நகரமாக மிலன் விளங்கி வருகிறது. இங்கு முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 200 முதியவர்கள் வரை பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு தங்களது அறைகளில் முதியவர்கள் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர்.
நள்ளிரவு நேரத்தில் இந்த இல்லத்தின் ஒரு அறையில் திடீரென பற்றிய தீ மளமளவென மற்ற அறைகளுக்கும் வேகமாக பரவியது. இதனையறிந்த முதியவர்கள் பயத்தில் அலறி உள்ளனர். ஆனால் புகை மண்டலமாக காட்சியளித்ததால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையே முதியோர் இல்லத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. ஆனாலும் நள்ளிரவு நேரத்தில் அனைவரும் தூங்கி கொண்டிருந்ததால் மீட்பு பணியில் சிறு தொய்வு ஏற்பட்டது.
இதனை பொருட்படுத்தாது மீட்பு படையினர் வேகமாக களமிறங்கினர். மேலும், இந்த தீ விபத்தில் 6 முதியவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் நெரிசலில் சிக்கி 70 க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது என்கிற தகவல் வெளியாகி உள்ளது. மீட்கப்பட்ட முதியவர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த தீ விபத்துக்கான முக்கிய காரணம் குறித்து காவல்துறை அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர்.