Mnadu News

தமிழக தொழில் நிறுவனங்களில் தமிழருக்கே முன்னுரிமை:அமைச்சர் அறிக்கை.

தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; டாடா எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மின்னணு பொருட்களை உற்பத்தி செய்வதற்காக தனது தொழிற்சாலையை கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ள புஆசு தொழிற்பூங்காவில், சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்துவருகிறது.
4 அயிரத்து 684 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுவரும் இத்தொழிற்சாலையின் மூலம் ஏறத்தாழ 18 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொழிற்சாலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுவருவதாக பத்திரிக்கை செய்திகளும் புகார்களும் அரசிற்கு வந்துகொண்டிருக்கின்றன. இந்நிறுவனம் தற்போது வரை தமிழ்நாட்டைச் சார்ந்த ஏறத்தாழ 5 ஆயிரத்து 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. வணிக ரீதியிலான உற்பத்தியினைத் தொடங்கும் போது பணியாளர் தேவையில் ஏறத்தாழ 80 விழுக்காடு பணியிடங்களுக்கு தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களை நியமிக்க டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பொறுப்புறுதி அளித்துள்ளது.
இதன் மூலம் தமிழ்நாட்டைச் சார்ந்த நபர்களுக்கு நிறுவனத்தால் வேலைவாய்ப்பு வழங்குவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதோடு, தமிழ்நாட்டில் அமைந்துள்ள பிற தொழில் நிறுவனங்களும் தமிழ்நாட்டைச் சார்ந்த நபர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதை இந்த அரசு உறுதி செய்யும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

Share this post with your friends