நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாகிச்சூடு நிகழ்த்திய சம்பவத்தில் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பையின் பாந்த்ரா பகுதியில் நடிகர் சல்மான் கானின் வீடு அமைந்துள்ள கேலக்ஸி அடுக்குமாடிக் கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்துக்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள் நான்கு முறை சுட்டுள்ளனர். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
அவர்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் 307-ஆவது பிரிவின் (கொலை முயற்சி) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாகிச்சூடு நிகழ்த்தியதாக சந்தேகிக்கப்படும் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவரை காவல்துறையினர் நேற்று(ஏப். 15) நள்ளிரவில் கைது செய்தனர்.
குஜராத்தின் பூஜ் பகுதியில் தங்கியிருந்த இருவரையும் மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.