நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறினார்.
சென்னை திருவான்மியூரில் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு 2ம் கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. செங்கல்பட்டு, சென்னை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை வழங்கினார்.
தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் உரையாற்றினார். அப்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நீட் விலக்கு கோரும் தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது.மாநில கல்வியில் பயின்றுவிட்டு தேசிய கல்வியில் தேர்வு எழுத சொல்வது அநீதி. நீட் குளறுபடி நடந்தது மூலம் நீட் மீதான நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் இழந்துவிட்டது. காலதாமதம் செய்யாமல் ஒன்றிய அரசு தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.நிரந்தர தீர்வாக பொதுப் பட்டியலில் இருந்து கல்வியை நீக்கி மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். மாநில அரசுக்கு கல்வி, சுகாதாரத்தில் முழு சுதந்திரத்தை தர வேண்டும். என தெரிவித்தார்.