மராட்டியத்தில் கைதான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் 5 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டனர்.
மும்பை, மராட்டியத்தில் கைதான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் 5 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டனர். 12 இடங்களில் சோதனை மராட்டியம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் அதன் தலைவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ., உள்ளூா் போலீசார் சோதனை நடத்தினர். மராட்டியத்தில் என்.ஐ.ஏ. சோதனையின் ஒரு பகுதியாக மாநில பயங்கரவாத தடுப்பு படையினர் சுமார் 12 இடங்களில் நேற்று அதிகாலை நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை மும்பை, நவிமும்பை, தானே மாவட்டத்தில் உள்ள பிவண்டி, அவுரங்காபாத், புனே, கோலாப்பூர், பீட், பர்பானி, நாந்தெட், ஜல்காவ், ஜல்னா, மாலேகாவ் ஆகிய இடங்களில் நடந்தது. 20 பேர் பிடிபட்டனர் இந்த சோதனையின் போது பயங்கரவாத தடுப்பு படையினர் 20 பேர் பிடிபட்டனர். இவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் முக்கிய ஆவணங்கள் சிக்கின. மும்பை, நாசிக், அவுரங்காபாத், நாந்தெட்டில் சோதனைக்கு பிறகு 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் 2 பிரிவினர் இடையே மோதலை உருவாக்குதல், மாநிலத்துக்கு எதிராக குற்றச்செயலில் ஈடுபட சதிதிட்டம் தீட்டுதல், சதிதிட்டம் ஆகிய பிரிவுகளின் கீழும் மற்றும் உபா சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே கைதான 5 பேரும் நேற்று மும்பையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாட்கள் காவலில் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பயங்கரவாத தடுப்பு படை கேட்டது. ஆனால் 5 நாட்கள் பயங்கரவாத தடுப்பு படை காவலில் ஒப்படைத்து கோர்ட்டு உத்தரவிட்டது.