புதுடெல்லி: மாநிலங்களவையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது, மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் நாட்டின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் விளக்கினார்.
தொடர்ந்து, கடந்த ஆட்சி காலங்களில் காங்கிரஸ் அரசு விவசாயிகளை தவறாக வழிநடத்தியது என்று குற்றம் சாட்டி பிரதமர் பேசியபோது, குறுக்கிட்டு பேசுவதற்கு தனக்கு வாய்ப்பு வழங்கும்படி எதிர்க்கட்சி தலைவர் கார்கே கோரிக்கை வைத்தார். ஆனால் அவரது கோரிக்கைக்கு அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் செவிசாய்க்கவில்லை. இதையடுத்து கார்கேவை பேச அனுமதிக்கும்படி எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் முழக்கங்கள் எழுப்பினர். இந்த அமளிக்கு மத்தியில் மோடி தனது உரையை தொடர்ந்தார்.
பின்னர் கார்கே எழுந்து தன்னை பேச அனுமதிக்குமாறு பலமுறை கேட்டுக்கொண்டார். தொடர்ந்து வலியுறுத்தியதால் கார்கே பேசுவதற்கு அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அனுமதி அளித்தார். அனுமதி கிடைத்தபோதும், தொடர்ந்து கோஷங்கள் எழுப்பிய இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததற்கு அவைத்தலைவர் தன்கர் கண்டனம் தெரிவித்தார். இது அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயல் என குறிப்பிட்டார். பிரதமர் மோடியும் அதிருப்தி தெரிவித்தார்.